போன ஆட்சியிலே!உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நம்ம கோவையில் நடைபெற்றது.அதற்காக பள்ளிக் கல்வி துறை சார்பாக ஒரு கவிதை போட்டி நடத்தினார்கள்.அந்த கவிதைப் போட்டிக்கு கொடுத்த தலைப்பு 'சங்கத் தமிழ் அனைத்தும் தா'.அந்த கவிதை போட்டிக்கு ஒரு கவிதை அனுப்பி இருந்தோம்,பரிசு கிடைக்கவில்லை,இருந்தாலும் அந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
சங்கத் தமிழ் அனைத்தும் தா!
அன்புத்தமிழ் அன்னைத் தமிழ் அழகுத் தமிழே,
அம்மா தமிழ் அவ்வைத் தமிழ் அணைக்கும் தமிழே,
இணையத் தமிழ் இலக்கியத் தமிழ் இனிக்கும் தமிழே,
ஈகைத் தமிழ் எழுச்சித் தமிழ் இளமைத் தமிழே,
உண்மைத் தமிழ் உயிர்மைத் தமிழ் உலகத் தமிழே,
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் வல்ல தமிழே,
ஒற்றுமைத் தமிழ் ஓங்கு தமிழ் ஒளிரும் தமிழே,
செல்லத் தமிழ் சேவைத் தமிழ் செம்மொழித் தமிழே,
கல்வித் தமிழ் கவிதைத் தமிழ் காதல் தமிழே,
மண்ணும் தமிழ் மரமும் தமிழ் மக்கள் தமிழே,
வைகைத் தமிழ் வாழ்க்கைத் தமிழ் வாகை சூடும் தமிழே,
பாமரன் தமிழ் பாசத் தமிழ் பாரினை ஆளும் தமிழே,
நெல்லை தமிழ் நேசத் தமிழ் நெருப்புத் தமிழே,
தென்னகத் தமிழ் தேவதைத் தமிழ் தேசத் தமிழே,
வில்லுத் தமிழ் வீணைத் தமிழ் வித்தகத் தமிழே,
புகழும் தமிழ் புதிரும் தமிழ் புலவன் தமிழே,
ஒன்றும் தமிழ் ஒடுக்கும் தமிழ் ஓசைத் தமிழே,
வேதத் தமிழ் ஞானத் தமிழ் மூத்தத் தமிழே,
உவமைத் தமிழ் ஊன்று தமிழ் உரிமைத் தமிழே,
கொங்கு தமிழ் கொடுக்கும் தமிழ் கொள்கைத் தமிழே,
செம்மைத் தமிழ் செல்வத் தமிழ் செழிக்கும் தமிழே,
சங்கத் தமிழ் அனைத்தும் தா! எங்கள் தமிழே.