ஞாயிறு, 12 ஜனவரி, 2025

பொங்கல் திருநாள் என்கிற மகாபாரத வெற்றி விழா 🤝🐘

பொங்கல் திருநாள் என்கின்ற மகாபாரத வெற்றி விழா

பொங்கல் பண்டிகைக்கு முன் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் மரக் குச்சிகளை எரித்து மேளம் அடித்து கொண்டாடப்படுகிறது. எதனால் இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது?

பொங்கல் பண்டிகை என்பது விவசாய திருநாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. முதன்முதலில் விவசாய நிலங்களை உருவாக்குவதற்கு முன்பு பூமி முழுவதும் இருந்தது காடுகள்தான் காடுகளை அழித்து தான் விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மரங்களையும் வெட்டி காடுகளை அழிப்பது என்பது எளிதான காரியம் அல்ல அதனால் தீ வைத்து எரித்து காடுகளை அழிப்பது தான் எளிதான காரியம். 

காடுகளுக்கு தீ வைக்கும் போது அங்கு வாழும் அப்பாவி உயிரினங்கள் பறவைகள் பாதித்து விடக்கூடாது. அவற்றுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பி அவற்றை துரத்தி பின்பு காடுகளுக்கு தீ வைக்க வேண்டும். இவ்வாறு தீ வைத்து புகை "போக்கி" விவசாய நிலங்கள் கிடைத்ததால் அந்தப் பண்டிகைக்கு போக்கி - போகி என்று பெயர் வைக்கப்பட்டது. விலங்குகளையும் பறவையையும் ஒலி எழுப்பி விரட்டியது நினைவாக இன்று மேளம் அடிக்கும் வழக்கம் உள்ளது.

புகைப்பிடித்து அதை வெளியில் போக்கி இன்பம் அனுபவித்தவர்கள் போகி என்று அழைக்கப்பட்டனர். போகம் என்பது இன்பம் அனுபவிப்பதை குறிக்கும் சொல்லாக மாறியது.

மகாபாரதம் என்ற மிகப்பெரிய போர் நடந்தது தமிழகத்தில் தான் அது ஐந்து பாண்டிய மன்னர்களுக்கும் 101  மலை குறவர்களுக்கும் நடந்த போர். பாண்டிய மன்னர்கள் காடுகளை அழித்து நிலங்களை உருவாக்குவதை பிடிக்காமல் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மலை அரசர்கள் பாண்டியர் மீது போர் தொடுத்தனர். போரில் பாண்டியர்கள் வெற்றிபெற்றனர் அந்த வெற்றி விழாவை தான் பொங்கல் விழாவாக நாம் இன்று கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

சமஸ்கிருத மகாபாரதம் என்பது உண்மையான நிகழ்வை திரித்து எழுதப்பட்ட ஒரு திரிபு நூல்.அதில் பாண்டியர்களை பாண்டவர்கள் என்றும் குறவர்களை கௌரவர்கள் என்றும் திரித்து எழுதி இருக்கிறார்கள். மேலும் பல அசிங்கமான கதைகளோடு புனையப்பட்ட ஒரு அபத்த காவியம்.

அதில் பாஞ்சாலி 5 மன்னர்களுக்கு மனைவி என்று அசிங்கமாக எழுதப்பட்டுள்ளது. உண்மையில் பாஞ்சாலி என்பது விவசாய நிலம் அது ஐந்து பாண்டிய மன்னர்களுக்கு சொந்தமான விவசாய நிலம். பஞ்ச அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம் பஞ்ச +ஆளி - பாஞ்சாலி. பாஞ்சாலியின் இன்னொரு பெயர் திரௌபதி. 
தரையில் வதிப்பவள் - தரை வதி - திரௌபதி.
இன்றும் திரௌபதி கோயிலில் தரையில் உருவங்களை மண்ணால் உருவாக்கி வழிபடும் மரபு இருக்கிறது மேலும் காட்டை எரித்ததன் நினைவாக தீ மிதிக்கும் வழக்கமும் இருக்கிறது.

மலைக்கும் மருத நிலத்திற்கும் இடைப்பட்ட நிலம் முல்லை நிலம் இது இடைப்பட்ட நிலம் என்பதால் இதில் வாழ்ந்தவர்களை இடையர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இதில் இரு பிரிவுகள் உள்ளன மாடுமேய்க்கும் பிரிவு ஆயர்கள், ஆடு மேய்க்கும் பிரிவு  கோனார்கள். போரில் ஆயர்கள் பாண்டியர்களை ஆதரித்தார்கள் கோனார்கள் குறவர்களை ஆதரித்தார்கள்.

பொங்கல் பண்டிகை போரின் வெற்றி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் ஆயர்கள் நினைவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது மேலும் ஆயர்களின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் நடத்தப்படுகிறது.

போரில் தோற்று இருந்தாலும் தங்களையும் சேர்த்து கொள்ளுமாறு கோனார்கள் பாண்டியர்களை கண்ட நிகழ்வை காணும் பொங்கலாக கொண்டாடி கொண்டிருக்கிறோம். உழவர்கள் கோனாருக்கு தங்கள் உணவு வகைகளை கொடுத்தனர் பதிலுக்கு கோனார்கள் ஆட்டின் கறியை உழவர்களுக்கு கொடுத்தனர் அதன் நினைவாகவே காணும் பொங்கலை கரி நாள் என்றும் அழைக்கிறோம். 

விவசாய திருநாள் பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது இந்தியா முழுவதும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். பஞ்சாபிலும் அசாமிலும் கூட விவசாய திருநாள் கொண்டாடப்படுகிறது. அசாமில் இதற்குப் பெயர் மகா பிகு அதாவது பெரிய போர் என்று பொருள். 

மலை அரசர்கள் வாழ்ந்த இடம் கேரளா. மலை ஞாலம் என்பது தான் மலையாளம் ஆக மாறி இருக்கிறது. சேரர்கள் ஆண்டதால் சேரளம் என்று அழைக்கப்பட்டு இன்று அது கேரளம் ஆகி இருக்கிறது. இன்றும் கேரளாவில் விவசாய பண்டிகை கொண்டாடப் படுவதில்லை. மேலும் துரியோதனனுக்கும் ,சகுனிக்கும் கேரளாவில் மட்டுமே கோயில் உள்ளது. 

மகாபாரத கதையில் பீஷ்மர் என்ற ஒரு கதாபாத்திரம் வரும் அது உண்மை கதாபாத்திரம் அல்ல. 
வீ + சமர் - விஷ்மர் - பீஷ்மர்.
வி என்றால் சிறந்த பெரிய என்று பொருள் ,சமர் என்றால் போர் என்று பொருள். போரையே ஒரு கதாபாத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். அவர் இறக்கும் நாள்தான் போர் முடியும் நாள் என்று ஒரு குறிப்பு சொல்லப்பட்டிருக்கும். என்று தட்சிணாயனம் முடிந்து உத்தராயனம் தொடங்குகிறதோ அன்று இறப்பேன் என்று சொல்வார். தைத் திருநாளில் தான் சூரியன் தென் சலவை என்ற தட்சிணாயனம் முடிந்து வட சலவை என்கின்ற உத்தராயணத்தில் திரும்பும் நாள். 

நம் ஒவ்வொரு பண்டிகையும் பல வரலாறுகளை சுமந்து கொண்டிருக்கிறது. இந்த வரலாறுகளை மீட்டுருவாக்கம் செய்த தமிழ் சிந்தனையாளர் புகழ் பாண்டியன் அய்யா அவர்களுக்கு நன்றி.

மேலும் தகவலுக்கு அய்யாவின் காணொளியை காணுங்கள்.
https://youtu.be/WouB6g3t7Ok

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக