செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

தியானமும் பாலின்பமும்

தியானமும் பாலின்பமும்.... 

மனம் என்பது இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு
இயந்திரத்திற்குச் சமம். அவ்வப்போது அது ஓய்வெடுத்துச் செயல் படும் போது தான், மனித வாழ்வில் அதிசயங்கள் நிகழ்கின்றன. 

மனம் தன் சிந்தனையை நிறுத்தும் போது, அது ஒரு நிச்சலன சக்தியாக  மாறுகிறது. அவ்வாறு நிச்சலன சக்தியாக மனிதனின் மனம் மாறும் போது, பிரபஞ்ச சக்தியோடு எளிதாக இணைந்து விடுகிறது.

சக்தி என்றால் அதிர்வு என்று பொருள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்
சக்தி மயம். 

உங்கள் வீடு, நீங்கள் அமர்ந்துள்ள நாற்காலி, உங்கள் நகம், உங்கள் சிந்தனை என அனைத்தும் இந்த வினாடியில் கூட அதிர்ந்து கொண்டு இருக்கின்றன. உணர முடியாத அதிர்வு அது. இந்தியாவின் ஆதி யோகியால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட உண்மை இன்றைய பௌதீக விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டு விட்டது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவற்றிற்குரிய நியமப்படி அதிர்ந்து
கொண்டிருக்கிறது. அந்த அதிர்வின் ஊடே, எவ்வித அதிர்வையும்
வெளிப்படுத்தாமல் நிச்சலன சக்தியாகி விட்ட மனிதனின் மனம் எளிதாக நுழைந்து விடுகிறது. அவ்வாறு, பிரபஞ்ச சக்தியின் அதிர்வுகளோடு மனித மனம் ஐக்கியமாகும் போது மனமற்ற நிலையை அந்த மனிதர் அடைந்து விடுகிறார். இது தான் ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், ஞானமடைதல் என்பது எளிதான காரியமல்ல. கோடியில் ஒருவருக்கே ஞானமடைதல் சாத்தியம், அதனால் மனதின் இயக்கத்தை நிறுத்தி, அதற்குரிய ஓய்வை அளிக்க ஒரு சராசரி மனிதனால் முடியாது. ஆனால், ஞாளிகளால் முடியும்.

அவர்கள் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கிறார்கள்.

அந்த வழிமுறைகளுக்குப் பெயர் தான் தியானம் மற்றும் தவம். தவமும்,
தியானமும் மனதின் சிந்தனையோட்டத்தை நிறுத்தி மனதிற்கு ஓய்வளிக்கும்
உபாயங்கள்.

தவம் என்பது பிரணாயாமம் மூலம் சுவாசத்தைக் கவனிக்கத் தொடங்கி, மனதின் சிந்தனையோட்டத்தை நிறுத்தி மனதிற்கு ஓய்வளித்தல்,

தியானம் என்பது மனதின் எண்ண ஒட்டத்தை நீதிபதியாகவோ, கைதியாகவோ இல்லாமல், ஒரு வழிப்போக்கனாகக் கவனிப்பதன் மூலமாக எண்ணங்களற்ற நிலைக்குள் நுழைதல்.

ஒரு சிலர் சொல்வது போல் மனதை ஒரு முகப்படுத்துதல் தியானம் அல்ல. மனதின் எண்ண ஓட்டத்தைக் கவனிப்பதன் மூலமாக மனதை சிந்தனைகளற்ற நிலைக்குக் கொண்டு செல்வதே தியானம். அறிந்ததினின்றும் விடுதலை என்பதே அது. 

மேற்கண்ட நிலையை அடைவதற்கு தவத்தையும், தியானத்தையும் தவிர
மூன்றாவதாகவும் ஒரு வழி இருக்கிறது. ஏறக்குறைய தொண்ணூற்றொன்பது
சதவீத ஆண்களும், பத்து சதவிகித பெண்களும் இந்த மகோன்னத நிலைக்குத் 
தங்களையும் அறியாமலே சென்றிருக்கிறார்கள். அதன் மூலமாக பிரபஞ்ச சக்தியோடு தங்கள் மனோ சக்தியை ஐக்கியப்படுத்தி, அந்தப் பேரானந்த சுகத்தை அனுபவித்திருக்கிறார்கள். 

அதன் காரணமாக அந்த பேரானந்தப் பரவச இன்ப வெள்ளத்திலே நீந்தித் திளைக்க எப்போதும் ஆவலாகவே இருக்கிறார்கள். 

அந்த மூன்றாவது வழி தான் பாலின்பம். அதாவது பாலின்பம் என்று
சொல்லும் போது, இன்பம் துய்த்தலின் போது. ஏற்படக்கூடிய உச்ச சுட்ட
இன்பத்தைக் குறிப்பதாகும். வெறும் உராய்வின்பம் பாலின்பம் ஆகாது. ஏனெனில், உச்சகட்ட இன்பம் நிகழாத பாலுறவிற்கு, மனதிற்கு ஓய்வளிக்கும் சக்தி இல்லை. அதனால் தான் இன்பம் துய்த்தலில் ஈடுபட்டு ச்ச கட்ட இன்பங்களை அனுபவிக்காதவர்கள் பெரும்பாலும் மனதால் அலைக்கழிக்கப் படுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனம் உருவான நாள் முதலாக ஒரு விநாடி நேரம் கூட
ஓய்வேயின்றி இயங்கிக் கொண்டிருப்பதால், மனம் எப்பொதும் கொந்தளிக்கும்
நிலையிலயே இருக்கிறது. அதனால் தான், அற்ப காரணத்தை முன்னிட்டுக்
கூட அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு வீடுகிறார்கள். 
இதன் அடிப்படையில் தான் பாலின்பம் என்பது புனிதமானது என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

ஏனெனில், தியானம், தவம் போன்ற செயல்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு, பல்லாண்டு கால கடுமையான முயற்சிக்குப் பின், ஞானிகள் பெறக்கூடிய பேரானந்தப் பரவச நிலையை பாலின்பம் மிக எளிதாக அளிக்கிறது என்று ஞானிகள் என்று மனிதர்களால் அறியப்பட்ட அத்தனை பேரும் கூறி இருக்கிறார்கள்.
தந்த்ரா வழியில் தாம்பத்தியம் என்ற   புத்தகத்திலிருந்து. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக