செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

ஆதி திராவிடன் என்பது வரலாற்றுப் பிழை

"ஆதி திராவிடன் என்பது வரலாற்று பிழை" 

‘அரிஜன்’ என்பது காந்தியின் ஏமாற்று ! ‘தாழ்த்தப்பட்டவன்' என்பது தன்மானமின்மை! 'தலித்' என்பது தமிழின இழப்பு! ‘பழந்தமிழன்” என்பதே சிறப்பும் பெருமையும்! ‘ஆதி ஆந்திரன்’ ‘ஆதிகன்னடன்' ‘ஆதிகேரளன்’ - என்று பிறர் தம்மைச் சுட்டும் பொழுது, ‘ஆதி(பழந்)த்தமிழன்' என்பதே சிறந்தது !

தமிழர்களைத் 'திராவிடர்' என்று அழைப்பது மொழியியல் படியும் இனவியல் படியும் வரலாற்றுத் தவறானது என்பதையும், தமிழிலிருந்து சமசுக்கிருதத் தொடர்பால் பிரிந்த ஏனைய தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழிகளே 'திராவிட மொழிகள்'...

சமசுக்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை; திராவிடரும் இல்லர். 

தமிழ் , கன்னடம் , மலையாளம் , தெலுங்கு , துளு போன்ற மொழிகள் திராவிட மொழிகள் என்று தமக்கு தோன்றியதை வரலாறாக வைத்து சிலர் தருக்கமிடுவர்..
மேற்கூறிய மொழி இன வரலாற்றின் அடிப்படையில், இக்கால் உள்ள தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர் முதலிய இனங்கள் அனைத்தும், பிந்தைய திராவிட இனத்தவர் என்றும், இவர்களில் சிலர் மிக முந்தைய திராவிட இனத்தவர் (Proto-Dravidians) என்றும், அவர்களே ஆதிதிராவிட இனத்தவர் என்றும், மற்றொரு வரலாற்றுப் பிழையினைச் செய்து வருகிறார்கள். இத்தவறான முந்தைய, பிந்தைய மதிப்பீட்டைத் தமிழின வரலாற்றை நன்கு உணராத மேலை நாட்டையும், வட இந்தியாவையும் சார்ந்த வரலாற்றாசிரியர்கள் சிலர் கூறி வந்தாலும், தமிழர் தவிர பிற தெலுங்கு, கன்னட, மலையாள, துளு இனத்தினர் தங்களுள் ஆதி திராவிடர் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தமிழருள் உள்ள பழந்தமிழ் இனத்தவரையே ஆதி திராவிடர் என்றும், தங்களுக்குள் உள்ள பழங்குடியினர் சிலரை, ஆதி ஆந்திரர் (தெலுங்கர்), ஆதி கன்னடர், ஆதி கேரளர், ஆதி துளுவர் என்றுமே கூறி வருகின்றனர். உண்மையில் தமிழர் திராவிட இனத்துள் அடங்குபவரே அல்லர். தமிழரினின்று ஆரிய மொழி, இனக்கலப்பால் உருவாகிய தெலுங்கரும், கன்னடரும், மலையாளரும், துளுவரும் பிற நடு இந்திய, வட இந்திய தமிழினத் திரிபுக்குடிகளுமே திராவிடர் ஆவர்.

'திராவிடர்' என்னும் பெயர் ஆந்திரர், கன்னடர், கேரளர், துளுவர் முதலிய அனைத்து இனத்தினர்க்கும் பொதுவானால், அவர்கள் ஏன் அப்பெயரால் தங்களை அழைத்துக் கொள்ள விரும்பவில்லை ? திராவிடர் என்று கூறிக் கொள்ளும் வரலாற்றுத் தவறைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து விட்ட தந்தை பெரியாரும் கூட, இவ்வகையில் தாம் குழப்பம் அடைவதாகவே கூறியுள்ளதும் இங்குக் கருதத் தக்கது. அவ்வாறிருக்க, தமிழர்கள் மட்டும் தங்களைத் திராவிடர்களென்றும், அதிலும் தமிழின முந்தையர் தங்களைப் ‘பழந்தமிழர்' என்று கூறிக் கொள்ளாமல் 'ஆதிதிராவிடர்கள்' என்று பொருளற்ற முறையில், தொடர்ந்து விடாப்பிடியாகக் கூறிக் கொள்ள ஏன் விரும்பவேண்டும் ? இழிவை உடைமையாக்கிக் கொள்வது உரிமை மீட்பிற்கு உதவுமா, என்பதை எண்ணிப் பார்க்கும்படி அவர்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக