வியாழன், 14 டிசம்பர், 2023

பச்சையம்மன் பாடல்

*இன்றைய ஆசீவக வழிபாட்டுப் பாடல்*

🌾🌾பச்சையம்மன்🦚🦚
"""""""""""""" """""""""""
1.
நாளும் கோளும்
     நிறமும் கருத்தும்
ஆளும் தெய்வமும்
      பருவமும் ஏழே
வாழ்நிலை ஈதென
     வரையறை செய்தே
வீழ்நிலை யறுத்த
     எம்பெரு மானே.
     
2.
தீயில்பி  றந்தவள்
     தெய்வமென் றானவள்   
வெள்ளியின் பெயரால்
     வள்ளியென் றானவள்
மங்கையின் கருவளம்
     காப்பவள் நீயே
பயிர்வளம் பெருக்கும்
      பச்சை யம்மனே!

3.
வன்னியில் தோன்றிய
    திரௌபதி தாயே
கன்னியில் மூன்றாம்
    படிநிலை நீயே
அன்னம் படைக்கும்
    பூரணி தாயே    
நின்னருள் வேண்டும்
    அருள்புரி வாயே! 

4.
மருதமும் நெய்தலும்
    வளம்பெறச் செய்தே
இருபெரும் பரப்பை
    ஆள்பவள் நீயே!
நிலத்திலும் நீரிலும்
    உயிர்வளம் பெருக்கும்
நிலமகள் நீயே
    மீனாட்சி தாயே!

5.
மங்கையின் காளையின்
    மக்கட் பேறினை
மங்கல மாக்கும்
    மங்கையர் தேவி
வெள்ளிக் கிழமையில்
     பச்சை யம்மனாம்
ஏழு நாட்களும்
    மாரி யம்மனே!
6.
பயிரெனப் பச்சை
    பட்டினை யுடுத்தி
பயிர்களைக் காக்கும்
    பொம்மி யம்மனே
தீயில் விளைந்த
    திருமகள் நீயே
தாயெனும் எங்கள்
    மாரி யம்மனே!

7.
எல்லையி லமர்ந்த
    செல்லி யம்மனே!
கொல்லையி லமர்ந்த
    பொம்மி யம்மனே!    
மத்தியி லமர்ந்த
    மாரி யம்மனே!
மக்களைக் காத்தே
    அருள்புரி வாயே!

8.
தேவியும் நீயே!
    தெய்வமும் நீயே!
மாவிளக் கேற்றி
    உனைத்தொழு தோமே!
மகிமை யருளும்
    மாரியும் நீயே
வணங்குகின் றோமுமை
    நித்தமும் தாயே!

9.
வருவாய் அருள்வாய்
    திருவாய் மலர்வாய்
வரும்நாள் தோறும் 
    மாறி மாறியே!!🦚

🌾🌴🌳🎍🌾🌴🌳🪴🌾🌴🌳🪴🌾

16.இருமை. . . . .
                """""""""""""""""
241.
     புடைப்பெனுஞ் சொல்லே
         படைப்பெனக் காண்பீர்
     புடைப்பும் படைப்பும்
         பொருளென ஒன்றே

     242.
     கல்லின் புடைப்பென
         சிற்பத்தின் படைப்பு
     கல்லும் சிற்பமும்
         இருவே றன்றே

     243.
     கல்லே முன்னிலை
         சிற்பம் பின்னிலை
     கல்லினுள் சிற்பம்
         படைத்தது கல்லே

     244.
     படைத்தல் என்பது
         உலகுரு வாக்குதல்
     படையல் என்பது
         உலகுரு வாதலே

     245.
     படைத்தவன் ஒருவன்
         பொய்யெனக் கொள்க
     கடவுளின் புடைப்பென
         உலகினை காண்பீர்.

புடைப்பு என்ற சொல்லே படைப்பு என்று திரிந்துள்ளது.
புடைப்பென்றால் உப்புதல் அல்லது இருக்கும் பகுதியிலிருந்து குறிப்பிட்ட பகுதி சற்று மாறுபட் தெரியும் பகுதி எனக் கொள்ளலாம்.
படைப்பு என்ற சொல்லின் உண்மையான பொருள் புடைப்பு என்ற சொல்லின் பொருளே.

கல்லில் செதுக்கப்பட்டதே சிற்பம் எனும் படைப்பு. அதாவது கல்லின் புடைப்பே சிற்பமெனும் படைப்பாகும்.
அவ்வாறு படைக்கப்பட்ட சிற்பமும் கல்லும் வெவ்வேறல்ல.

ஒரு சிற்பம் முந்தைய நிலையில் கல்லாகவும் பிந்தைய நிலையில் சிற்பமாகவும் படைக்கப்படுகிறது. அச்சிற்பத்தை புடைத்தது அல்லது படைத்தது கல்லேயாகும்.

படைத்தல் என்பது உருவாக்குதல் என்றும், படையல் என்பது உருவாதல் என்றும் பொருள்படும்.

இந்நிலையில் இவ்வுலகை ஒருவன் படைத்தான் என்பது தவறான புரிதலாகும்.
மாறாக கடவுளின் புடைப்பே இப்பேரண்டம் என்று கொள்வதே சரியான புரிதலாகும்.
    
_பாடலாசிரியர் மணிகண்டன் நயினார் அவர்கள்🪷_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக